சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06.2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்ட தியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார்கள்.


அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களில் எவ்வாறு கலந்து கொள்வது கூடாதோ அது போன்று பெண்வீட்டு விருந்து வைக்கப்படும் திருமணங்களிலும கலந்து கொள்வது கூடாது. அதுவும் ஒர் பித்அத்துதான். அனாச்சாரம் தான் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.

பிறகு மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஏன் புதிதாக வாங்கும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்காக பதிவு செய்ய வேண்டும்? என்பதையும் டிரஸ்டாக பதிவு செய்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் கொள்கையற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்கள்.

பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத் தலைவரும், கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினருமான முஹம்மது நாசிர் அவர்கள் முபாரக் பள்ளிவாசல் அருகில் வாங்கப்பட்ட இடத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில்தான் ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூல் செய்தார் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்து நான் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்யவில்லை என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது கடைந்தெடுத்த பொய் என்பதையும் நிருபித்தார்.

மேலும ஸைஃபுல்லாஹ் ஹாஜா இடம் வாங்குவதற்காக வசூல் செய்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டால் இந்த உண்மைகள் அவருடைய வாயினாலே வெளிப்படும் என்றும் அவர் அவ்வாறு வெளியிடுவாரா? என்றும் பொதுக் குழு உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.

ஸைஃபுல்லாஹ் ஹாஜா மீது நடவடிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும், மாவட்டப் பொறுப்பிலும் கிளைப் பொறுப்பிலும் இருந்த அவருடைய வகைறாக்களும் கீழ்கண்ட காரணங்களினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர்.

01-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் மூலமாகவே நடத்தப்படவேண்டும். ஆனால் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களோ தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத், முபாரக் நலச் சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவாக் குழு, அக்ஸா மாணவர் அணி அமைப்பு போன்றவற்றை உருவாக்கி அவற்றின் பெயரில் தேர்தல் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், பிரசுரங்கள் வெளியிடுதல், அரசியல் வாதிகள் சந்திப்பு என்று செயல்பட்டு வருகிறார். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளுக்கு எதிரானதாகும்.

02-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்த தானம் செய்தல், கத்னா முகாம் நடத்துதல், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற பல்வேறு பணிகளைக் குறிப்பிட்டு அரபியிலும் ஆங்கிலத்திலும் புரஃபைல் தயாரித்து அதனைக் காட்டி பல இலட்சங்களை (சுமார் 40 இலட்சம் அல்லது அதைவிட அதிகம்) வசூல் செய்து முபாரக் பள்ளிவாசல் அருகில் உள்ள நிலத்தை வாங்கி அது தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்.

03-இவ்வாறு பதிவு செய்யலாமா? என்று ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பிஜேயிடம் கேட்ட பொழுது அவ்வாறு செய்வது கூடாது, ஜமாஅத்தின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும், அல்தாஃபி அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகம் இது பற்றி கேள்விப்பட்டு அல்தாஃபி, பிஜே, சம்சுல்லுஹா இன்னும் பல நிர்வாகிகள் முன்னிலையில் ஸைஃபுல்லாஹ் அவர்களை எச்சரிக்கை செய்த பிறகும் ஜமாஅத்திற்குத் தெரியாமல் தனக்கு வேண்டப்பட்ட தனி நபர் பெயரில் பதிவு செய்தது மிகப் பெரும் மோசடியாகும்.

04-நாங்கள் கடையநல்லூர் மக்களிடம் மட்டும் தான் வசூல் செய்தோம் என்று ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் கூறுகிறார். ஆனால் இது பொய்யாகும். கடையநல்லூர் மக்களிடம் மட்டும் வசூல் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைக் காட்டி அரபியிலும் ஆங்கிலத்திலும் ஏன் புரஃபைல் தயாரிக்க வேண்டும்.? ஆங்கிலத்தில் அல்லது அரபியில் படித்தால் தான் கடையநல்லூர் மக்கள் உதவி செய்வார்களா? மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலத்தின் சார்பில் விசா எடுக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகியாக பேச்சாளராக ரமலான் பிரச்சாரத்திற்காக துபாய் சென்ற பொழுது ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அமீரகம், குவைத், சவூதி அரேபியாவில் உள்ள கடையநல்லூர் அல்லாத தமிழ்நாடு தவ்ஹீத் சகோதரர்களிடமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையநல்லூரைச் சார்ந்த பலரும் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்காகவே உதவி செய்துள்ளனர். தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்து கொண்டே, தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக்காட்டி புரபைல் தயாரித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களிடம் வசூல் செய்து தனிப்பட்ட கமிட்டிக்கு பாத்தியப்பட்டது என்று கூறுவது ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதும் ஜமாஅத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மைக்கு எதிரானதாகும்.

05-புதிதாக எந்த ஒரு சொத்து வாங்கினாலும் அது அந்தந்த கிளையின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே வாங்கப்பட வேண்டும், அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையிலுள்ள அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பது நமது சட்ட விதியாகும். இதில் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வந்து பல்வேறு ஊர்களிலும் இவ்வாறு தான் நம்முடைய மர்கஸ்களுக்கு இடம் வாங்கப்படுகிறது. ஆனால் இது நடைமுறைக்கு வந்த பிறகு இந்த விதிக்கு எதிராக கடையநல்லூரில் புதிதாக வாங்கிய இடத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்ததுடன் அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, இது முபாரக் கமிட்டிக்கு பாத்தியப்பட்டதாகும், மாநிலத் தலைமை எங்கள் நிர்வாகத்தில் தலையிட அதிகாரமில்லை என்றெல்லாம் கூறுவது அமைப்பிற்கு எதிரான மிகப்பெரும் துரோகமாகும்.

06-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தான் பல்லாண்டுகளாக முபாரக் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. மேலும் மாநிலத் தலைமையின் மூலம் அளிக்கப்படும் ஃபித்ரா போன்றவைகளையும் இந்தக் கமிட்டி மூலம் விநியோகித்தனர். ஜாக்கினர் பள்ளியினை ஆக்கிரமிக்க வந்தபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தான் அதனை எதிர்த்து நின்றனர். வசைமொழிகளைத் தாங்கிக் கொண்டனர். இஸ்லாமியக் கல்லூரி பணத்தைத் தான் (கடனாக) முபாரக் பள்ளிவாசல் வழக்கு வகைக்காக ஸைஃபுல்லாஹ் பயன்படுத்தினார். மேலும் முபாரக் வழக்கு வகைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பல்வேறு செலவினங்களைச் செய்துள்ளனர். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இல்லையென்றால் முபாரக் பள்ளிவாசலை ஜாக்கினர் ஆக்கிரமித்திருப்பர். இது உலகிற்கே தெரிந்த உண்மை. அனைத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முபாரக் கமிட்டி என்பது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உட்பட்டதல்ல. என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது மாபெரும் மோசடியாகும்.

07-ஆடம்பரத் திருமணங்களிலும், பித்அத்கள்,பெண்வீட்டு விருந்து நடைபெறும் திருமணங்களிலும் கலந்து கொள்வது, அத்திருமணங்களை நடத்தி வைப்பது, சீர் சீராட்டு என்ற பெயரில் தவ்ஹீத் வாதிகள் இலட்சக்கணக்கில் பாத்திர பண்டங்களை வாங்கிக் கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

08-கிளை நிர்வாகத்தை கிளை நிர்வாகிகள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு மாற்றமாக கடையநல்லூர் கிளை நிர்வாகத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக கிளையின் பெயரில் இயங்கக்கூடிய ஆம்புலன்ஸ் வரவு செலவு கணக்குகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் நிர்வாகக் குழுவிலோ பொதுக் குழுவிலோ மக்களுக்கு மத்தியில் அதன் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

09-கிளை நிர்வாகிகள் தீர்த்து வைக்க வேண்டிய குடும்பப் பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தான் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வைப்பது.

10-மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாநில நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல், கிளை உறுப்பினர்களிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் கடையநல்லூரைச் சார்ந்த மாவட்ட நிர்வாகியையும், கிளை நிர்வாகிகளையும் கைப்பாவைகளாக்கி, ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் ஆதாயம் தேடி புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிவாசல் என்ற பெயரில் கட்டிடம் கட்டியது இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பணத்தினை இலட்சக்கணக்கில் செலவு செய்தது பொதுமக்களுக்கு மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்ணியததிற்கு பாதிப்பை ஏற்பறடுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக திகழ்ந்தவர் ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தான்.

11-மாநில நிர்வாகத்திற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல் மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்த சகோதரர் அப்துந் நாசிர் அவர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தி முபாரக் பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுவதற்கு பல மாதங்கள் தடைவித்தது ஜமாஅத்திற்கு எதிரான செயலாகும். மாநில நிர்வாகிககள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநிலத் தலைமைக்குரியதே என்பதை ஸைஃபுல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தும் மாநிலத் தலைமைக்கு எதையும் தெரிவிக்காமல் இவ்வாறு செயல்பட்டிருப்பது ஜமாஅத்திற்கு எதிரானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

12-மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஜும்ஆ உரைக்காக தாயிக்களை அனுப்பும் போது மாநில நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக எதேச்சதிகாரமாக அந்த தாயிக்களை மாற்றியதும் அவர்களுக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுக்கிறோம் எனவே எங்கள் விருப்பப்படி தான் பயன்படுத்துவோம் என்று கூறி ஜமாஅத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டினார்.

13-கடையநல்லூரைச் சார்ந்த ஒரு தனவந்தர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதுள்ள நம்பக்தன்மையாலும் நற்பணிகளாலும் கவரப்பட்டு தன்னுடைய நிலத்தினை பள்ளிவாசல் கட்டுவதற்காகவும், மையவாடி அமைப்பதற்காகவும் தானமாக வழங்கினார். அவருக்கு ஸைஃபுல்லாவாகிய என்னைத் தான் தெரியும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் கேட்டு ஜமாஅத்தின் அந்தஸ்தை பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்தி ஸைஃபுல்லாஹ் பேசி வருகின்றார். இது அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் உச்சகட்டம் ஆகும். ஸைஃபுல்லாஹ் ஜமாஅத்தினுடைய நிர்வாகியாக இல்லாமல் இருந்திருந்தால் இவரை யாருக்காவது தெரிந்திருக்குமா? நபியவர்கள் ஸகாத்தை வசூலிக்க அனுப்பிய நபித்தோழர் இவ்வாறு கூறிய போது இவர் தன்னுடைய தந்தை வீட்டிலோ தாய் வீட்டிலோ இருந்திருந்திருந்தால் இவருக்கு கிடைத்திருக்குமா? என்று நபியவர்கள் பதில் கூறினார்கள். அந்த நபித் தோழரின் கூற்றைப் போன்று தான் ஸைஃபுல்லாஹ்வின் பேச்சுகளும் அமைந்துள்ளன.

14-சுய இலாபத்திற்காக அரசியில் வாதிகளுடன் கைகோர்த்து செயல்பட்டதும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசியும் ஸைஃபுல்லாஹ் அவர்கள் செயல்பட்டுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

15-தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கி வ்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட முபாரக் பள்ளிவாசல் அருகில் அந்த ஆம்புலன்ஸிற்காக உள்ள இடம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட இடத்தில் நிறுத்தக் கூடாது. என்று கூறியதுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டில் எடுத்து நிறுத்தி ஜமாஅத்திற்கு எதிரான தன்னுடைய குரோதத்தை ஸைஃபுல்லாஹ் வெளிப்படுத்தினார்.

மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் இன்னும் ஜமாஅத்திற்கு எதிரான பல செயல்பாடுகளாலும் ஸைஃபுல்லாஹ் அவர்களும் அவரைச் சார்ந்த அவருடைய வகையறாக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் மாநிலத்தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்புப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.

எனவே சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுடன் ஜமாஅத் தொடர்பான எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முபாரக் பள்ளிவாசல் தொடர்பாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்து தனி நபரின் பெயரில் பதிவு செய்தது தொடர்பாகவும் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுது.

Source: www.tntj.net