தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!

,
தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.

புரட்சித் தலைவியின் புகழ் பாடுவதில் தினமணி ஆசிரியர் வைத்தி (வைத்தியலிங்கம்) மாமாதான் தமிழ் ஊடகங்களிலேயே டாப்பு. அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை பாசிச ஜெயா மூட உத்திரவிட்ட போது அதை மயிலிறகால் வருடியவாறு செல்லமாக கண்டிப்பது போலக் காட்டிக் கொண்டு பின்னர் அந்த நூலகம் கட்டியதில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பாசிச ஜெயாவே யோசிக்காத கோணத்திலெல்லாம் எடுத்துக் கொடுத்து நத்திப் பிழைப்பதில் இந்த மாமா பலே கில்லாடி. அப்பேற்பட்ட வைத்தி மாமா 12.11.2011 தினமணி தலையங்கத்தில் “ஏனிந்த பயம்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மாலத்தீவில் மன்மோகன் சிங்கும், பாக் பிரதமர் கிலானியும் சமீபத்தில் சந்தித்து “புதிய உறவு, புதிய இணக்கம்” என்பது போல டெம்பிளேட் டைப் ராஜதந்திர வார்த்தைகளை உதிர்த்தார்கள். இதெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் சடங்கு சந்திப்புகள். இதைப் போய் புதிய அத்தியாயம் என்றெல்லாம் பாராட்டுகிறார் வைத்தி மாமா. தொட்டதுக்கெல்லாம் பாக்கை கரித்து கொட்டும் இந்துமதவெறியர்களின் கோயபல்சான தினமணி இப்படி எழுதியிருப்பது ஆச்சிரியமாயிருக்கிறதே என்று சிலர் நினைக்கலாம். இல்லை அதன் பிறகு வருகிறது மேட்டர்.

பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் ” கசாப் குற்றவாளிதான், நீங்கள் தூக்கில் போடலாம்” என்று பேசியிருப்பதை குறிப்படுகிறார் வைத்தி. இது உண்மையிலேயே பேசப்பட்ட வார்த்தையா, இல்லை வெறும் நடிப்பா என்று எகத்தாளம் வேறு. இருந்தும் பாக்குடன் ஒத்து வாழ்வதுதான் சாலச்சிறந்தது என்று சாணக்கியத்தனமான பாசங்கு வேறு. இதே போல் சம்ஜூத்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிற்கு காரணாமான குற்றவாளிகளை தூக்கில் போடுமாறு வைத்தி மாமா கோரவில்லை. என்ன இருந்தாலும் பாகிஸ்தானியின் உயிருக்கு மதிப்பில்லை அல்லவா?

பாகிஸ்தானை பகடி செய்தவாறே இந்தியா பாக் உறவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் மாமா பிறகு நைசாக தனது மதவெறியை சொருகுகிறார். அதாவது கடந்த ஒரு மாதத்தில் பாக்கில் உள்ள சிறுபான்மை மக்களான இந்துக்களை தாக்கி மூன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றனவாம். முதலாவதாக சிந்து மாகாணத்தில் உள்ள சிக்கர்பூர் அருகே இந்து மதத்தைச் சேர்ந்த நான்கு மருத்துவர்கள் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனராம்.
இதற்கு அமெரிக்காவே கண்டனம் தெரிவித்தாலும் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறதாம். கேட்டால், “இறந்தவர்கள் இந்தியர்கள் அல்ல; பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தானில் யாரோ பாகிஸ்தானியர் சுட்டு இறந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்கிற பதிலை முன்வைக்கிறதாம் இந்திய வெளிவிவகாரத் துறை. இதற்காக இந்தியாவை ஆவேசமாகக் கண்டிக்கிறார் வைத்தி மாமா.

பாக்கில் கொல்லப்பட்ட நான்கு மருத்துவர்களுக்காக இந்தியா கண்டிக்கவில்லை என்பதை தந்திரமாக மதச்சாயம் பூசி மடைமாற்றுகிறார் வைத்தி மாமா. முதலில் பாக்கில் சிறுபான்மை இந்துக்களை விட பெரும்பான்மை முசுலீம் மக்கள்தான் அன்றாடம் மசூதியில், கடைத்தெருவில், லாகூரில், கராச்சியில், எல்லைப்புற மாகாணங்களில் பல பத்துக் கணக்கில் கொல்லப்படுகின்றனர். அமெரிக்காவின் கைப்பிள்ளையாய் காலம் கழித்து, பழமைவாதிகளை வளர்த்து விட்ட திருப்பணிக்கு பாகிஸ்தான் விலைமதிப்பற்ற மக்கள் உயிரை பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்து வருகிறது. இது தனிக் கதை.

ஆனால் இதை ஒட்டு மொத்த சூழ்நிலையில் வைத்துப் பார்க்காமல் நைசாக நான்று இந்து மருத்துவர்கள் மட்டும் கொல்லப்பட்டதாக காட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுதான் பார்ப்பனிய நரித்தந்திரம். கண்டிப்பதாக இருந்தால் இந்திய அரசு, பாக்கில் கொல்லப்படும் அனைத்து மக்களுக்காவும் பேசுவதாகத்தானே கோர வேண்டும்? மனித உயிரில் முசுலீம் உயிரை விட இந்து உயிர் உசத்தி என்பதுதான் வைத்தி மாமாவின் கருத்து.

இதன் மூலம் மறைமுகமாக இந்தியா ஒரு இந்து நாடு, உலகில் இந்துக்கள் எங்கே கொல்ப்பட்டலும் சீறி எழவேண்டிய நாடு என்பதாக வாசக மனதில் நஞ்சை தடவுகிறார்.

இது கூடப்பரவாயில்லை, இதற்கு அனுபந்தமாக வைத்தி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. அதன்படி, “இந்தியாவில் ஏதாவது ஒரு இஸ்லாமியரை நிலத்தகராறில் ஒரு இந்து தாக்கியதாக இருந்தாலும் கூட அதை மத ரதீயான தாக்குதலாக பாகிஸ்தான் வர்ணிக்கும் போது, நியாயமான ஒன்றுக்குக்கூட நாம் கண்டனம் தெரிவிக்க பயப்படுகிறோமே, ஏன்?” என்று நரித்தனமாக கேட்கிறார் வைத்தி.

இதன் மூலம் இந்தியாவில் இசுலாமியர்கள் யாரும் சல்லிசாக கொல்லப்படவில்லை என்பதோடு அதை பாகிஸ்தான்தான் மிகைப்படுத்துவதாக உறுமுகிறார் நமது வைத்தி. வட இந்தியாவில் இசுலாமிய மக்கள் கொல்லப்படாத நகரங்களோ, கலவரங்களோ இருக்கிறதா? இசுலாமிய மக்கள் காக்கை குருவிகள் போல கொல்லப்படும் இந்தியாவில் அப்படி ஒன்று இல்லை என்பதாக சித்தரிப்பதற்கு எத்தனை வன்மம் வேண்டும்?

இந்திய அரசு எந்த இந்தியர்களுக்காக கவலைப்படுகிறது? வளைகுடாவிலும், மலேசியாவிலும் ஏழை இந்தியர்கள், தாக்கப்படும்போது கண்டித்திருக்கிறதா? இல்லை வைத்தி உள்ளிட்ட ஊடக முதலாளிகள்தான் அதற்காக இந்திய அரசைக் கண்டித்திருக்கின்றனரா? தாக்கப்பட்ட ஏழை இந்தியர்களில் ‘இந்துக்கள்’ இல்லையா? ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட பணக்கார இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் வைத்தி வைகையறாக்கள் இப்போது பாகிஸ்தான் இந்துக்களுக்காக குரல் கொடுப்பது பச்சையான முதலைக் கண்ணீரில்லையா? அதுவும் இசுலாமிய வெறுப்பை வளர்த்து இந்து ராஷ்டிரம் அமைக்க முயலும் இந்துமதவெறியர்களின் நலனுக்கான ‘கண்ணீர்’ எனும் போது வைத்தியின் மாமாவின் சகுனி வேலையை புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் குறித்து தினமணியின் அடுத்த கவலையைப் பார்க்கலாம். அமெரிக்க அரசின் ஆய்வுக்குழு ஒன்று தனது அறிக்கையில், பாகிஸ்தான் பள்ளிப் பாடநூல்களில், இந்து மதம், கிறிஸ்தவ மதம் இரண்டையும் பற்றித் தவறான, மத துவேஷத்தை ஏற்படுத்துகிற தகவல்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறதாம். பாகிஸ்தானில் 2 விழுக்காடு இந்துக்கள், 1 விழுக்காடு கிறிஸ்துவர்கள், அதே அளவு சீக்கியர்கள் வசித்தாலும், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கும் கலாசாரத்துக்கும் இவர்களது பங்களிப்பு பற்றி பாடநூல்களில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சொல்கிறதாம்.

முசுலீம்களை அழித்து விட்டு இந்து ராஷ்டிரத்தை தோற்றுவிப்பதற்கு கூட இந்துமதவெறியர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது போலும். இந்தியாவில் கிறித்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்கிறார்கள், பண்பாட்டை சிதைக்கிறார்கள் என்று கூப்பாடு போடுபவர்கள், அமெரிக்கா என்றதும் அது கிறித்தவ அமெரிக்கதான் என்றாலும் அடக்கி வாசிப்பதன் காரணம் ஏகாதிபத்திய விசுவாசிகளாக இருப்பதுதான். விசுவ இந்து பரிஷத் தலைவர் பாபர் மசூதி இடித்த சமயத்தில் பில் கிளிண்டனை முசுலீம்களை ஒழிக்க வந்த கிருஷ்ண பரமாத்மா என்று வாழ்த்தி எழுதிய கடிதம் அதற்கோர் ஆதாரம்.

முதலில் வரலாறு, பண்பாடு குறித்த நேர்மை எதுவும் அமெரிக்காவில் இல்லை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனின் பங்கை முழுவதும் இருட்டடிப்பு செய்துதான் அங்கு கற்றுக் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் படமாகவும் எடுக்கிறார்கள். உலகப்போர் தொடர்பான அருங்காட்சியகத்தில் கூட ரசியா என்ற பெயரைக்கூட பார்க்க முடியாது. இப்பேற்பட்ட உலகரவுடியிடம்தான் வைத்தி மாமா தனக்கான ஆதரவை கண்டெடுக்கிறார்.

பாகிஸ்தானின் இந்து மத துவேஷத்திற்கு வைத்தி மாமா காட்டும் ஆதாரம் என்ன? அங்குள்ள பாடநூல்களில் “கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்கிற மதம் இந்து மதம்” என்று தவறாக இருக்கிறதாம். இது குறித்து அங்குள்ள இந்துச் சிறுபான்மையினர் குரல் கொடுக்க முடியவில்லையாம். என்னதான் பாரதப்பண்பாட்டை காக்க வைத்தி மாமா சீன் போட முயன்றாலும் இந்து மதத்தின் ‘பேசிக் நாலட்ச்’ கூட தெரியாத அசட்டு மாமாவாக இருக்கிறாரே?

வேதத்தை ஏற்றுக் கொண்டு கடவுளை மட்டும் ஏற்காதவன் நாஸ்திகன்; வேதத்தையும், கடவுளையும் ஏற்றுக்கொள்பவன் ஆஸ்திகன். வேதத்தையும், கடவுளையும் ஒருசேர ஏற்காதவர்கள்தான் சாருவாகனர்கள் போன்றோர். நாம் நடைமுறையில் பயன்படுத்தும் நாத்திகம் என்ற சொல்லும் அப்படி இரண்டையும் மறுப்பவர்களைக் குறிக்கின்றன என்றாலும் பார்ப்பனிய இந்து மதத்தின் அளவு கோலின் படி நாஸ்திகன் என்றால் மேலே சொன்ன பொருள்தான். அதன்படி பாகிஸ்தானின் பாட நூல்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். பாய்கள் இந்துமதத்தை சரியாக புரிந்து வைத்திருக்கும்போது, அம்பிகள் இப்படி அசட்டு பிசட்டு அம்மாஞ்சிகளாய் இருக்கிறார்களே?

வைத்தி மாமா தமிழகச் சூழலில் வளர்ந்தவர் என்பதால் இந்துமதவெறியர்கள் கட்டோடு வெறுக்கும் பெரியார், திரவிட இயக்கங்களின் நாத்திகம் என்ற சொல் அவரையும் வதைத்திருக்கும். அந்த வெறுப்பை பாகிஸ்தானுக்கும் நாடு கடத்துகிறார். எனினும் இந்த முட்டாள்தனத்தை வெறும் அறியாமை என்று பார்ப்பதை விட அவரது சகுனியாட்டத்தின் பரிமாணமாகவே புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் இந்த பாடநூல் விவகாரத்தை அமெரிக்கா கண்டிக்கும்போது இந்து மதத்தின் தாயகமான இந்தியா கண்டிக்கவில்லை என்று சகுனி வருத்தப்படுகிறார்.

அந்தப்படிக்கு இந்துமதத்தின் தாயகமான இந்தியாவில் இந்து மதத்தை விமரிசிக்கும் அம்பேத்கார், பெரியார், கம்யூனிஸ்ட்டுகளை ஏன் நாடு கடத்தவில்லை என்றும் அவரது கேள்வியை நாம் புரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான மூன்றாவது தாக்குதலாக வைத்தி மாமா குறிப்பிடுவதை பார்க்கலாம்.

“பெஷாவர் நகருக்கு அருகே கோரக்நாத் கோயில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி தினத்தன்று திறக்கப்பட்டு, நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கூடி வழிபட்டனர். ஆனால், அன்றைய தினமே பூட்டிச் சாவியை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள். இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்பதில் சீக்கியர்-இந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் அரசு தலையிட்டு பூட்டி விட்டது. சரி, புதிய கோயிலைக் கட்டிக்கொள்ளலாம் என்றால் அதுபற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாத நிலைமை.”

உப்பு பெறாத விசயங்களைக்கூட எப்படி லென்ஸ் வைத்து தேடி ஊதிப்பெருக்குகிறார்கள்? இதில் பாகிஸ்தான் அரசு என்ன தவறு செய்தது? ஒரு கோவிலை இரண்டு தரப்பினர் தங்களுக்கு சொந்தம் என்று அடித்துக் கொள்ளும் போது எந்த அரசும் இதைத்தானே செய்திருக்க முடியும்? கோவிலுக்கு சொந்தம் யார் என்று தீர்ப்பு வரும் வரைக்கும் இதுதானே நியதி?
சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவுதான் என்று ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தமது ஷாகாக்களில் பெருமையுடன் பீற்றித்திரிவார்கள். ஆனால் அதை மறுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கியர்கள் போராடிய போது ஆர்.எஸ்.எஸ் தனது பெருமையை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்பு கேட்டது. இருப்பினும் புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் அனைத்தும் இந்து மதத்தின் கிளைகள் என்பதுதான் அவர்களது பெரியண்ணன் சிந்தனை. குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் இது இந்துக் கோவில் என்றுதான் வைத்தி வாதிடுகிறாரே ஒழிய உரிமையில் போட்டி போடும் சீக்கியரை அவர் இந்துவாக கருதவில்லை. கணக்கு காட்ட மட்டும் சீக்கியர்கள் இந்துக்கள் என்பதுதான் அவர்களது செயல்தந்திரம். போகட்டும். நீதிமன்றத் தாவா பிரச்சினையில் இருக்கும் ஒரு சொத்து விவகாரத்தைக்கூட பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பூதாகரமாக காட்டுவது எத்தனை அயோக்கியத்தனம்? இது தினமணி மட்டுமல்ல, இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் பரப்பி வரும் விசமப் பிரச்சாரம்தான்.

இந்த மூன்று விசயங்களையும் குறிப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் அல்லும் பகலும் தாக்கப்படுவதாக வைத்தி மாமா புனைந்திருக்கும் கதைகளின் யோக்கியதை இதுதான். இறுதியில் வைத்தி மாமா இந்தியா ஒரு இந்து தேசமாக இருந்தாலும் அப்படி அறிவித்துக் கொள்ளாமல் மதசார்பற்ற நாடு என்று அறிவித்துக் கொண்ட நாடு என்பதால் நம்மைப் போன்று பாகிஸ்தான் எனும் மதச்சார்பு உள்ள நாடை ஒப்பிடக்கூடாது என்கிறார். இது பெருந்தன்மை என்று வேறு பில்டப் கொடுக்கிறார்.

கடைசியில், "இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிற ஒரே காரணத்துக்காக, இதுபற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, கேள்வி எழுப்பக்கூடாது என்பதை இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சகோதரனேகூட ஏற்றுக்கொள்ள மாட்டான். நமது மத்திய அரசு மட்டும்தான் மௌனம் சாதிக்கும். இதற்குப் பெயர் முதுகெலும்பு இல்லாமையே தவிர, மதச்சார்பின்மை அல்ல!” என்று சாபம் கொடுக்கிறார்.

இதில் நாம் பேசக்கூடாது என்பதை இசுலாமிய சகோதரன் கூட ஏற்றக் கொள்ளமாட்டான் என்ற வாக்கியத்தை உற்று நோக்குங்கள். அந்த நாமில் இசுலாமிய மக்கள் இல்லை. எனில் அந்த நாம் யார்? இந்துக்கள்தானே? அதன்படி நாமென்றாலும், இந்தியா என்றாலும் இந்துக்களைத்தான் குறிக்கிறது என்பதை வைத்தி மாமா ஒப்புக்கொள்கிறார். இப்படி பச்சையாக இந்து நாடாக இருக்கும் போது மதச்சார்பற்ற எனும் நாகரிகப்பட்டம் எதற்கு வைத்தி சார்?

முதலில் இந்து மதம் என்பது ஒரு மதமில்லை. அது சாதிகளை கட்டுக்கொப்பாக வைத்து நடத்தும் ஒரு கிரிமினல் நிறுவனம். மேலும், “இந்துக்கள்” என்ற பதத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திர – பஞ்சமர்கள் வரமாட்டார்கள். மீதியிருக்கும் சிறுபான்மை ‘மேல்’சாதியினர்தான் இந்துக்கள். இந்த இந்துக்களை எதிர்த்து சூத்திர பஞ்சம உழைக்கும் மக்கள்  நடத்திய போராட்டத்தின் பலனாகத்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தில் வந்த உரிமையை இந்துக்களின் பெருந்தன்மை என்று பேசுவதற்கு காரணம் முசுலீமை எதிர்க்க சூத்திர பஞ்சம மக்களை இணைத்து கணக்கு காட்டும் தந்திரம்தான்.

ஆக, வைத்தி என்னதான் துள்ளிக்குதித்தாலும் இந்தியாவில் ‘இந்துக்கள்’ என்போர் சிறுபான்மைதான். இந்த சிறுபான்மைதான் இன்றுவரை இந்தியாவை ஆள்கிறது. அந்தச் செருக்கில்தான் பாகிஸ்தான் வரை சென்று வைத்தி மாமா லென்சை வைத்து செய்திகளை ஊதிப்பெருக்கி துவேஷத்தை வளர்க்க முடிகிறது. தினமணிதான் இந்து முன்னணி என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?

நன்றி www.vinavu.com